
எமது தேசியத் தலைவரின் தாய், தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற வந்தபோது, மண்ணைக்கூட மிதிக்க விடாமல் விமானத்தோடு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். தமது தள்ளாத வயதில் கடந்த காலங்களில் சிங்கள பேரினவாத அரசு பாதுகாப்பு முகாமில் கடும் துயருக்குள்ளாக்கப்பட்டு, தமது வாழ்வை கழித்துக் கொண்டிருந்த அந்த வீர மங்கை, தமது கணவனும் தேசிய விடுதலைக்கான ஒரு சிறப்பு வாய்ந்த மாவீரனை அளித்தவருமான தேசியத் தலைவரின் தந்தையை இழந்தப்பின் நோய்வாய்ப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்.
அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, படுக்கையிலிருந்து எழ முடியாத கடும் துயருக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழ்நாட்டில் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்கின்ற எதிர்பார்ப்போடு தமிழ்நாட்டிற்குள் வந்தபோது, விமானத்திலிருந்து அவரை இறங்கக்கூட அனுமதிக்காத பெரும் தவறை இந்திய அரசு செய்திருக்கிறது. முறைப்படியாக, இந்தியாவில் வந்து சிகிச்சைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் அனுமதி பெற்றும்கூட, தமிழ்நாட்டிற்குள் கால் வைக்க விடக்கூடாது என்று கங்கணம்கட்டி, தமிழ்நாடு அரசு அவரை தடுத்து அனுப்பியிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு கேவலமான அச்சமுள்ள அரசு இங்கே இயங்கிக் கொண்டிருப்பது தமிழர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு தான்.
தமிழர்களின் உரிமைகள் நாளுக்கு நாள் பறிக்கப்பட்டுக் கொண்டு, தமிழர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில், தமிழர்களின் இன அடையாளம் பொழுதுக்கு பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் தமிழ் தேசிய தலைவரின் தாயாரை தமிழ் மண்ணிலே கால் பதிக்க விடாமல், திருப்பி அனுப்பிய தவறை தமிழக அரசு செய்து, தம் மீது காலமெல்லாம் அழிக்க முடியாத பெரும் பழியை சுமந்து கொண்டிருக்கிறது. அவர் என்ன தவறு செய்தார், இல்லையெனில் என்ன தவறு செய்யப்போகிறார்.
தள்ளாத வயது. சற்றேறக் குறைய 80 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தாய், தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது, தமிழ்நாடு பெரும் கிளர்ச்சிக்கு உள்ளாகி விடுமா? அவரின் கால்பதிவு இந்த நாட்டை தேசிய அடையாளத்தை இழக்க செய்து விடுமா? அல்லது இன பற்றை வளர்த்துவிடுமா? அந்த அன்னையின் வருகையால் தமிழின உணர்வு மேலோங்கி தனி தமிழ்நாடு என்ற கோரிக்கை தாயக தமிழர்களுக்கு உற்சாக எண்ணமாய் உருமாறி விடுமா? என்னக் காரணத்திற்காக இந்த தமிழ் விரோத அரசுகள் இப்படிப்பட்ட ஒரு இழிச்செயலை செய்தது என்பதை நம்மால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.
அவர் முதியவர் என்கின்ற காரணத்தை சற்று ஒதுக்கிவிட்டு, ஒரு நோயாளி சிகிச்சைப் பெற வேண்டும் என்கின்ற மாந்த நேயத் தன்மைக்கூட நம் தமிழ்நாட்டில் இருந்து எப்படி வெளியேறியது என நினைக்கும்போது, நம்மைக் கண்டு நாமே வெட்கப்பட்டுக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு, அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு விட்டோம். இந்த இனத்திற்காக, இந்த இனத்தின் மொழிக்காக தமது ஆற்றல் வாய்ந்த ஒரு மகவை பெற்றளித்த மாசில்லா தாய்க்கு நாம் பட்டுக் கம்பளம் விரித்தல்லவா வரவேற்பளித்திருக்க வேண்டும்.
அவர் தமிழ் சொத்தை காப்பாற்றிய தமிழ் தேசிய தலைவரின் தாய் அல்லவா? தமிழினத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய மாவீரனின் அன்னை அல்லவா? உலகே தமிழரின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து, தமிழர்களின் வாழ்வுக்கு வீரத்தை அணிகலனாய் பூட்டிவிட்ட அளப்பறிய மறவன், ஆற்றல் வாய்ந்த மாவீரன், நமது தேசிய தலைவருக்கு தாய் அல்லவா? அவரை இந்த நாடு எப்படி வரவேற்றிருக்க வேண்டும். நாமல்லவா ஓடி அவரை தோள்மீது சுமந்து சிகிச்சை அளித்திருக்க வேண்டும். நாமல்லவா ஓடிச் சென்று அவரை அழைத்து வந்து என் வீட்டில், உன் வீட்டில் என போட்டிப்போட்டு வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
ஆனால் அவரை திருப்பி அனுப்பியதின் மூலம் தமிழினம் மீண்டும் ஒருமுறை அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்கிறது. இந்திய தேசியத்தின் அடிமையாக தமிழினம் கட்டப்பட்டிருக்கிற காரணத்தால், கைக்கட்டி இந்த அவலத்தைப் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்த இனம் உள்ளாகி இருக்கிறது. எந்த நிலையிலும் தமிழன் பிறருக்கு வாரி வழங்கும், பிறரின் துயர் போக்கும், பிறரின் பசிப்பிணி போக்கும் ஆற்றல் வாய்ந்தவனாக வாழ்ந்திருக்கிறானே? யானை தீம் பசி நீக்கிய இலக்கியங்களெல்லாம் இங்கிருந்து தானே தோன்றியது? அப்படிப்பட்ட ஒரு இனத்திற்கு, சிகிச்சை அளிக்க மாட்டேன் திரும்பிப்போ என்று சொல்லக்கூடிய கடின மனம் எங்கிருந்து வந்தது.
எதிரிக்குக்கூட துரோகம் செய்யாத தமிழினம், புறாவிற்கு பதிலாக தமது தொடைக்கறியை வைத்து எடைபோட்டுத்தந்த தமிழினம், நீதிக்காக தேர் காலில் தமது மகனை வைத்து நீதி காத்த தமிழினம் இவ்வளவுப் பெரிய அநீதியை எப்படி செய்ய முடிந்தது. இந்த தீங்கை எப்படி நடக்க அனுமதித்தது. இது இன்றல்ல, இன்னும் எத்தனைக் காலங்களானாலும் நமது அவமானமாகவே கருதப்படும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் நம் முகத்தைப் பார்த்து காரி உமிழ்வார்கள். நம் தேசிய தலைவரின் தாயைக்கூட பராமரிக்க முடியாத, கையாளாகாத ஒரு இனமாக தமிழினம் மாறிவிட்டதே!
கொத்துக்கொத்தாய் மாந்த இனம் கொல்லப்பட்ட போது, கைகட்டி, வாய் பொத்திய தமிழ் மரபு, இதோ அதன் தொடர்ச்சியாய் ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறது. என்ன நினைக்கிறார்கள். இந்திய தேசியம் பேசும் இவர்கள், நமக்கான ஒரு தேசம் இல்லாததல்லவா, நாம் இந்த இழிநிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளோம். தேசிய தலைவரின் தாய் என்பவர், நமக்கெல்லாம் தாய் அல்லவா? நம் தாயை நம்மால் வைத்துக் காக்க முடியாமல் திருப்பி அனுப்பியது எந்த அளவிற்கு அவமானகரமான செயல். இதை எப்படி நாம் ஏற்றுக் கொள்வது? வாய்விட்டு ஓவென்று அழுவதை தவிர, நம்மால் வேறொன்றும் செய்ய முடியவில்லையே.
இலங்கையைப் போன்று தான் இங்கேயும் காக்கிச் சட்டைப் போட்டுக் கொண்டு, தமிழனாய் வாழ்ந்து, தமிழனையே தடுத்து நிறுத்தும் கடும் பணியை காவல்துறை என்கின்ற ஒரு இனம் செய்து வருகிறது. விமான நிலையத்திற்குச் சென்று வைகோவும், நெடுமாறனும் இந்த தமிழ் காவல்துறையினரால்தான் தடுத்த நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இதோ, சட்டமீறல் நிகழ்ந்துவிடவில்லை. அவர்கள் சட்டப்படி விமான நிலையத்திற்குள் செல்லும் அனுமதி சீட்டைப் பெற்று, உள்ளே செல்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டு, கடும் வாக்குவாதத்திற்கு பின்னர்தான் அவர்களுக்கு உள்ளே செல்லவே அனுமதி கிடைத்திருக்கிறது.
இலங்கையிலே சிங்களன் தான் தமிழர்களை தடுத்தி நிறுத்தி வைக்கிறான். அவமானம், இங்கே தமிழனே தமிழனை தடுத்து நிறுத்துகிறான். தமிழனுக்கான உரிமைகள், தமிழனாலேயே தடுத்து நிறுத்தப்படுகிறது. தமிழர்களுக்கென்று உரிமைகள், தமிழ் மண்ணிலேயே மறுக்கப்படுகிறது. தமிழர்களுக்கான சிந்தனைகள் தமிழ் மண்ணிலேயே சிதைக்கப்படுகிறது. யாருக்காக இந்த நிலையை தமிழ்நாடு அரசு எடுத்தது என்பது புரியவில்லை. உலகெங்கும் அழைத்து செந்தமிழ் மாநாடு நடத்த இருக்கும் இந்த காலத்தில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று முழக்கத்தை முன்வைத்து வாழ்வு நடத்தும் தமிழ்நாட்டில், ஒரு தமிழ் தாய் சிகிச்சைப் பெற முடியாமல் திரும்பிப் போனது தமிழ் மரபுக்கு மட்டுமல்ல, தமிழ் மண்ணுக்கே தலைகுனிவு என்பதை எப்படி பதிவு செய்து வைப்பது.
நாளைய வரலாறு நம்மைப் பார்த்து கேளி பேசாதா? தமிழன் சென்று சொல்லிக் கொள்கிறாயே? தமிழ்நாட்டில் ஒரு தமிழ் தாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்த பெரும் தவறை நீ எப்படி செய்தாய்? என்று கேட்கும் போது, நீயும் நானும் என்ன பதில் சொல்லப்போகிறோம். அய்யோ நாங்கள் வாழ்வதுதான் தமிழ்நாடு. எங்களை ஆள்வது தமிழர் அல்ல என்று வெட்கப்பட்டு, தலைகுனிந்து நிற்கப் போகின்றோமா? அல்லது எம்மை ஆள்வது தான் தமிழர் என்று சொல்லிக் கொள்பவர்கள், ஆனால் அவர்களின் மூளை அனைத்தும் டெல்லியிலே முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்போகிறோமா? என்னச் சொல்லி இந்த பெரும் பழியை நாம் தீர்க்கப் போகிறோம். என்னச் சொல்லி நமக்கு நாமே ஆறுதல் படுத்திக் கொள்ளப் போகிறோம். புரியவில்லை.
எப்படி யோசித்தாலும் இது பெரும் குற்றம்தான். இதை மறுத்துரைக்க முடியாது. ஐயா பழ.நெடுமாறன் கூறியதைப் போன்று, ஒருவேளை அந்த தாய்க்கு ஏதாவது தவறு நிகழுமேயானால், அதற்கு இந்தியாவின் பார்ப்பனிய அரசிற்கு தலைமை வகிக்கும் சோனியாவும், மன்மோகன்சிங்கும் எவ்வளவு பொறுப்பேற்க வேண்டுமோ, அதே அளவிற்கு தமிழ் பெயர் சொல்லி கடைவிரித்து, கோடிக்கோடியான பணம் குவித்த கருணாநிதியும், அவரின் அரசும் காரணம் என்பதை நாம் மறுக்க முடியாது. அந்தத் தாய் வாழ்வது நமக்கு பெருமை அல்லவா? அந்தத் தாய் இயங்குவது நமக்கு பெருமை அல்லவா? அந்தத் தாய் தமிழ்மண்ணிலே சிகிச்சைப் பெறுவது நமக்கு பெருமை அல்லவா?
நமது தமிழினத்திற்குத்தானே அந்த தாய், தன் மகனை அர்ப்பணித்தார். தமது இனத்தின் விடியலுக்காகத்தானே அந்த சூரியனை அவர் படைத்தளித்தார். அவருக்கா நாம் மறுப்பது? எப்படி யோசித்தாலும் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருகாலத்தில் தேசிய தலைவரின் படங்களைக் கண்டு அச்சமுற்ற அரசு, அதை எங்கும் பொறித்து வைக்கக் கூடாது என்று தடை செய்தது. தேசிய தலைவரின் பெயரை சொல்ல தடை விதித்தது. தேசிய தலைவரின் உருவங்கள் எங்கேயும் வரையப்படக்கூடாது என தடைவிதித்தது.
அதையெல்லாம் தாண்டி இப்போது அந்த உன்னத தலைவனின் தாயார் தமிழ்நாட்டிற்கு வரவே தடைவிதித்திருக்கிறது. புலியை தமது வயிற்றில் சுமந்த அந்தத் தாய், இன்று ஒன்றும் புரியாமல் திரும்பிப் போயிருக்கிறார். நாம் தமிழ் மறவர்களாய் வசனம் பேசிக் கொண்டு வாழப் போகிறோமா? இல்லை, இனியும் இந்த அநீதி தொடராமல் தடுக்கப்போகிறோமா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடமே விடுகிறோம்.
18 Apr 2010
No comments:
Post a Comment